![]() |
பள்ளிகளில் திரையிடுதல் சார்ந்து பள்ளி தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட சிறார் திரைப்படங்கள் திரையிடலுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பிரிவேளைகளில் இத்திரைப்படத்தினை திரையிடுதல் வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் திரைப்படம் திரையிடுதல் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைக்க ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும்.
பள்ளி சூழலுக்கேற்ப, மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பின் முன்கூட்டியே திட்டமிட்டு மாணவர்களை குழுக்களாக பிரித்து கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறு இன்றி திரையிடல் நிகழ்வினை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் திரைப்படத்தை காண்பதற்கு நல்ல காற்றோட்டத்துடன் போதுமான இடவசதி உள்ள அறையை தெரிவு செய்ய வேண்டும்.
திரையிடுதலுக்கு முன், திரைப்படக்காட்டி மற்றும் ஒலிப்பெருக்கி சாதனங்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். குழந்தைகள் சிறந்த திரைப்பட அனுபவத்தை பெற ஏதுவாக, வெளிப்புற ஒளி குறைவாக இருப்பதையும் போதுமான காற்றுவசதி உள்ளதையும் உறுதி செய்திடல் வேண்டும். மின் சாதனங்கள் அதிக வெப்பமடையாதிருக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் மின் இணைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மின்சாதனங்களை மாணவர்கள் எளிதில் அணுக இயலாத வகையில் உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
EMIS வாயிலாக வழங்கப்படும் இத்திரைபடம் மாணவர்களுக்கென பிரத்யேகமாக தொகுக்கப்பட்டுள்ளது. எனவே, EMIS தளத்திலிருந்து மட்டுமே திரைப்படத்தினை திரையிடுதல் அல்லது பதிவிறக்கம் செய்தல் வேண்டும். பிற வலைதளங்களிலிருந்து இத்திரைப்படம் திரையிடுதல் அல்லது பதிவிறக்கம் செய்தல் கூடாது. EMIS இணைய வழியே தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான உள்நுழைவு அடையாளங்களை பயன்படுத்தி, திரைப்படத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்கூட்டியே, பதிவிறக்கம் செய்து, பென்-டிரைவ் அல்லது DVD-ல் சேமித்து வைத்து Projector வாயிலாக ஒலிபெருக்கி வசதியுடன் மாணவர்களுக்கு திரையிட வேண்டும். இவ்வசதி இல்லாத பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக