![]() |
செல்போன் பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்டு, சிறந்த ஆளுமைகளாக உருவாக்க ஓசூர் அருகே ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.7 லட்சம் செலவில் புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக எல்லையில் உள்ள ஓசூர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,720 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அதிக அளவில் கிராமப் பகுதி மாணவர்கள் படித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கப் பள்ளியில் புதியதாக நூலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் மதிப்பில் 2 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய புதிய நூலகம் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களைத் தேர்வு செய்து வாசித்து மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக தலைமை ஆசிரியை நர்மதாதேவி கூறியதாவது: கரோனா பரவல் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர் களிடையே அதிக நேரம் செல்போன் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பழக்கத்தை மாற்றவும், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், பள்ளியில் நூலகம் அமைக்க வேண்டும் எனப் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தரிடம் கோரிக்கை வைத்தோம். இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரூ.7 லட்சம் நிதியுதவி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு துறைகள் சார்ந்த 2 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க பாட நேரத்தில் வாரம் ஒரு முறை நூலகப் பாட வேளையை புதியதாக தொடங்க உள்ளோம். மாணவர்கள் வாரத்துக்கு ஒரு புத்தகம் படித்து அதில் உள்ள முக்கிய குறிப்புகளை எழுதி வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் செல்போன் பழக்கத்திலிருந்து விடு பட்டு, வாசிப்பு பழக்கத்துக்கு மாறி சிறந்த ஆளுமைகளாகத் திகழ்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக