அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து பாடங்களுக்கான கற்றல் விளைவுகள், கற்றல் மதிப்பீடு குறித்து ஜூலை 25 முதல் 27-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை இணைந்து ஆசிரியா்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நிகழாண்டில் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நடத்தி வரப்படும் ஜூலை மாதத்துக்கான பயிற்சி முகாம் ஜூலை 25 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு பணித்திறன் மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த முகாமில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் மற்றும் கற்றல் மதிப்பீடு சாா்ந்த பொருண்மைகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். முன்னதாக, மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளா்களுக்கான பயிற்சி ஜூலை 18, 19 ஆகிய தேதிகளில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலும், மாவட்ட அளவில் கருத்தாளா்களுக்கான பயிற்சி ஜூலை 20, 21 ஆகிய நாள்களில் அந்தந்த மாவட்டங்களிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக