
''தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 'நான் முதல்வன்'
தொலைநோக்குப் பார்வைத் திட்டம், 'உயர்வுக்குப் படி' திட்டம் ஆகியவற்றால் 15
ஆயிரத்து 713 மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களில்
சேர்ந்துள்ளனர்'' என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் விகிதத்தைக் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' என்ற தொலைநோக்குப் பார்வைத் திட்டம் கொண்டு வந்தார். 2022-23 கல்வியாண்டில், 3 லட்சத்து 23 ஆயிரத்து 456 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மூலம் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 460 பேர் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கப் பள்ளிகளில் உள்ள நான் முதல்வன் தொழில் பிரிவுகளால் வசதி செய்யப்பட்டது. மீதமுள்ள மாணவர்கள் மாவட்டம் வாரியாக அடையாளம் காணப்பட்டு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் மூலம் அவர்கள் உயர்கல்வியைத் தொடர 'உயர்வுக்குப் படி' என்ற முன்முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் 'உயர்வுக்குப் படி' திட்டம் மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது – முதல் கட்டம் 22.06.2023 முதல் 27.06.2023 வரை தமிழ்நாட்டில் உள்ள 34 கோட்டங்களிலும்; இரண்டாம் கட்டம் 30.06.2023 முதல் 04.07.2023 வரை தமிழகத்தின் மாவட்டங்களில் உள்ள 38 கோட்டங்களிலும் மூன்றாம் கட்டம் 07.07.2023 முதல் 08.07.2023 வரை தமிழ்நாட்டின் மாவட்டங்களில் உள்ள 21 கோட்டங்களிலும் திட்டமிடப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையால் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பிரிவு முகாம்களுக்குத் திரட்டப்பட்டனர். இந்த முகாம்களில், வங்கிகள் தங்களிடம் உள்ள கல்விக் கடன் திட்டங்களை விளக்கி ,பல்வேறு மாவட்டங்களில் உடனடிக் கடன் வழங்க ஏற்பாடு செய்தன. அத்துடன் மாணவர்களுக்கு, உயர்கல்வியின் முக்கியத்துவம், உதவித்தொகை விவரங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள், மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள், விவசாயம் மற்றும் அது சார்ந்த படிப்புகள், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகள் மற்றும் அவற்றின் அருகில் உள்ள கல்லூரிகளின் பட்டியலைக் காட்டும் 'கல்லூரிக் கனவு' கையேடு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்காகத் திரட்டப்பட்ட 30 ஆயிரத்து 269 மாணவர்களில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7,884 பேர், இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2,144 பேர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,461 பேர், ஐடிஐயில் 1,876 பேர் மற்றும் பிற உயர்கல்விப் படிப்புகளில் 2,348 பேர் உட்பட 15,713 மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் வெற்றிகரமாகச் சேர்க்கப்படுவதையும், அவர்களின் உயர்கல்வியைத் தீவிரமாகத் தொடர்வதையும் உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து கண்காணிப்பு அமைப்பையும் உருவாக்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக